Thursday, August 10, 2006

udaiyar kudi kalvettu--tamil version

உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 2 குடவாயில் பாலசுப்பிரமணியன்
உடையார்குடி கல்வெட்டு குறிப்பிடும் கோஇராஜகேசரிவர்மர் யார்?சோழப் பெருமன்னர்கள் மாறிமாறி புனைந்து கொள்ளும் இராஜகேசரி, பரகேசரி எனும் பட்டங்களில் ஒன்றான கோஇராஜகேசரி எனத் தொடங்கும் இக்கல்வெட்டுச் சாசனத்தில் மன்னன் பெயரோ, மெய்க்கீர்த்தியோ இல்லாத காரணத்தால் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வுக்குப் பின்பு இராஜகேசரி எனப் பட்டம் பூண்ட சோழ மன்னர்கள் பலரில் யாருடைய சாசனமாகவும் இது இருக்கலாம் என்ற முடிவினை நாம் கொள்ள முடிந்தாலும், இக்கல்வெட்டில் குறிக்கப்பெறும் குருகாடி கிழான் என்ற சோழப் பெருந்தரத்து அலுவலன் மாமன்னன் இராஜராஜ சோழனின் அலுவலன் என்பதைப் பிற சாசனங்கள் எடுத்துரைப்பதால் இச்சாசனம் முதலாம் இராஜராஜ சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற சாசனமே என்பது தெளிவு. மேலும் இச்சாசனத்தின் 7 ஆம் வரியில் குறிக்கப்பெறும் இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி நாள் என்ற வானிலைக் குறிப்பு இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த குறிப்பு என்பதால், இச்சாசனம் முதலாம் இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பெற்றது என்பது ஐயம் திரிபற உறுதியாகின்றது.சாசனம் குறிப்பிடும் இரண்டு ஆண்டுகள்மேலே கண்ட இக்கல்வெட்டுச் சாசனத்தில் குறிக்கப்பெறும் 'ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேசரிவர்மனுக்கு யாண்டு 2 ஆவது . . . ' என்ற ஸ்ரீமுகம் அனுப்பப்பெற்ற தொடக்கப்பகுதி குறிப்பிடும் ஆண்டும், ஏழாவது வரியில் உள்ள 'இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி ஞான்று' என்ற வியாழ கஜமல்லன் என்பான் அறக்கட்டளை வைத்த நாளைக் குறிப்பிடும் ஆண்டும் ஒரே ஆண்டு அல்ல. பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் இவ்விரு நிகழ்வுகளும் ஒரே ஆண்டில் நிகழ்ந்தவை என்ற கருத்தில் தம் கட்டுரையினை வரைந்துள்ளார்.கல்வெட்டில் குறிக்கப்பெறும் மேஷ நாயற்று (சித்திரை மாதத்து) பூரட்டாதி விண்மீன் கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது ஒப்பீட்டு ஆண்டுக் கணக்கீட்டின்படி (Indian Epimeries) கி.பி 986 ஏப்ரல் 23 ஆம் நாளினைக் குறிப்பதாகும். எனவே முதலாம் இராஜராஜனின் ஸ்ரீமுகம் கி.பி 986 அல்லது 987 இல் உடையார்குடி சபையோருக்கு அனுப்பப்பெற்று, பின்பே கி.பி 988 இல் வியாழ கஜமல்லன் என்ற தனியாரின் இச்சாசனம் பதிவு பெற்றுள்ளது.இராஜராஜனின் சாசனமன்றுஇக்கல்வெட்டுச் சாசனத்தை முதன்முறையாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சாஸ்திரியார் அவர்களும், பின்பு இச்சாசனத்தைப் பற்றிப் பேசிய அறிஞர்கள் அனைவரும் இது இராஜராஜ சோழனின் நேரிடையான ஆணையை வெளியிடும் சாசனம் என்றும், இச்சாசனம் பதிவு பெற்றபோதுதான் ஆதித்த கரிகாலன் கொலை கண்டுபிடிக்கப் பெற்று குற்றவாளிகளின் உடைமைகள் கைப்பற்றப் பெற்றன என்றும் கருதி, கொலை பற்றிய தங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இது தவறாகும். உடையார்குடி கல்வெட்டுச் சாசனத்தில் காணப்பெறும் முதல் நான்கு வரிகள் கி.பி.986 அல்லது 987 இல் (இராஜராஜ சோழனின் இரண்டாம் ஆண்டில்) வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் (உடையார்குடி) சபையோருக்கு மன்னனிடமிருந்து அனுப்பப் பெற்ற ஒரு அனுமதிக் கடிதமே ஆகும். அக்கடிதம் ஒரு நில விற்பனை ஆவணத்தில் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளதேயன்றி, அதுவே குற்றவாளிகள் பற்றி அரசு எடுத்த முடிவு பற்றிய ஆணையன்று. கி.பி 988இல் தனிநபர் ஒருவர் உடையார்குடி கோயிலுக்கு வைத்த அறக்கட்டளையைப் பற்றியும், அதற்காக வாங்கப் பெற்ற நிலங்கள் பற்றியும் விவரிப்பதே இச்சாசனம் என்பதால் இதனை இராஜராஜ சோழனின் நேரிடையான அரசுச் சாசனம் எனக் கொள்ளல் தவறாகும்.கல்வெட்டைப் பொறித்தவர் யார்?'வெண்ணையூர் நாட்டு வெண்ணை யூருடையான் நக்கன் அரவனையானான பல்லவ முத்தரையன் மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்திரு கழஞ்சு பொன்குடுத்து விலை கொண்டு இவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் முன்பு மூவாயிரத்து அறுநூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காசும், நிசதம் மதினைவர் பிராமணர் உண்பதற்கும், ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரையனேன், தர்மம் ரக்ஷிக்கின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலைமேலன' என்ற கல்வெட்டுச் சாசனப் பகுதியில், 'வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரை யனேன்', 'தர்மம் ரக்ஷிக்கின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலைமேலன' எனக் காணப்பெறும் வரிகள் மிகத் தெளிவாக தனிநபர் ஒருவரால் இச்சாசனம் பதிவு செய்யப்பெற்றது என்பதைக் காட்டி நிற்கின்றன.திருவெண்ணை நல்லூரினைச் சார்ந்த அரவனையான் பல்லவமுத்தரையன் மகன் பரதன் எனும் வியாழ கஜமல்ல பல்லவரையன் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருவனந்தீஸ்வரம் எனும் கோயிலில் தண்ணீர் பந்தலுக்காகவும் பதினைந்து பேர் சிவயோகிகள் உட்பட்ட சிவபிராமணர் உண்பதற்காகவும் 2 1/4 வேலி 2 மா நிலத்தையும் ஆறு மனைகளையும் 112 கழஞ்சு பொன் குடுத்து வாங்கி அறக்கொடையாக அளித்தான். அதற்காகத் திருக்கோயிலில் கல்வெட்டாகப் பதிவு செய்யப் பெற்றதே இச்சாசனமாகும். இச்சாசனத்திற்குரிய கர்த்தா திருவெண்ணைநல்லூர் பரதன் எனும் வியாழ கஜமல்ல பல்லவரையனே அன்றி மாமன்னன் இராஜராஜன் அல்ல என்பதை ஈண்டு நோக்குதல் வேண்டும்.

1 Comments:

At 9:24 AM, Blogger raj said...

What is the poetic lines mentioned in the inscriptions

 

Post a Comment

<< Home